ஸ்தம்பித்த ஆப்பிரிக்க நாடு... நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு: பலியான பலர்
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய வரி பரிந்துரைகளுக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் 13 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்றத்திற்கும் நெருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு
காவல்துறையின் பாதுகாப்பு அரணை உடைத்து முன்னேறிய கூட்டம் ஒன்று தலைநகர் நைரோபியில் நாடாளுமன்றத்தில் புகுந்து, ஒருபகுதிக்கு நெருப்பு வைத்துள்ளனர்.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை பேசிய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ, நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயகரமான குற்றவாளிகளின் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க அனைத்து வழிகளும் பயன்படுத்தப்படும் என சூளுரைத்துள்ளார்.
அத்துடன் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவத்தையும் களமிறக்கியுள்ளார். இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கென்யா மருத்துவ அமைப்பின் தலைவர் தெரிவிக்கையில், இதுவரை 13 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கானோர் காயம்
ஆனால் உறுதிப்படுத்தப்படாத சமூக ஊடக தகவல்களில், ஒரே இரவில் பாதுகாப்பு அதிகாரிகளால் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யாவில் பல வரி உயர்வுகளை உள்ளடக்கிய நிதி மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் பல நாட்களாக நடந்து வருகின்றன. ஆனால் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருத்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றிய நிலையிலேயே மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
நாடாளுமறத்தை முற்றுகையிட்ட மக்கள் ஒருபகுதிக்கு நெருப்பும் வைத்துள்ளனர். ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, மேற்கத்திய நாடுகள் பல வன்முறை சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்ததோடு அமைதி காக்க வலியுறுத்தியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |