கேரள குண்டுவெடிப்பில் தொடரும் சோகம்.., அடுத்தடுத்து உயிரிழந்த கணவன், மனைவி
கேரளாவில் மத வழிபாட்டு கூட்டத்தில் குண்டுவெடித்த சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
கேரளா குண்டுவெடிப்பு சம்பவம்
கடந்த ஒக்டோபர் 29 -ம் திகதி கேரளாவில் கொச்சி அருகே களமச்சேரியில் உள்ள சர்வேதேச மாநாட்டு அரங்கில் கிறிஸ்தவ பிரிவின் கீழ் யெகோவாவின் சாட்சிகள் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
அங்கு, அவர்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கிய சில நிமிடங்களிலேயே குண்டு வெடிப்பு நடந்தது. உடனே, பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் அலறியடித்து ஓடினர்.
இந்த குண்டு வெடிப்பில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த நிலையில், 52 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனைத்தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 -ஆக உயர்ந்தது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் பொலிஸில் சரணடைந்தார். அவர் காண்பித்த ஆதாரங்கள் அடிப்படையில் பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வைத்தது டொமினிக் மார்ட்டின் என்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் உறுதி செய்தனர்.
கணவன், மனைவி உயிரிழப்பு
இந்நிலையில், குண்டுவெடிப்பில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது பெண்ணான லில்லி ஜான் என்பவர் நேற்று உயிரிழந்தார். இதனால், பலி எண்னிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, இதே குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த லில்லி ஜானின் கணவர் ஜான் கடந்த 2 -ம் திகதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |