ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த கேரள இளம்பெண்ணை ஆப்கானில் விடுவித்த தாலிபான்கள்! மகளை இந்திய சட்டப்படி தண்டிக்க தாய் கோரிக்கை
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த கேரள பெண்ணை ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் விடுவித்த நிலையில் இந்திய சட்டப்படி அப்பெண்ணை தண்டிக்க வேண்டும் என அவரின் தாயார் கேட்டு கொண்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பாத்திமா என்ற பெண் தனது கணவருடன் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்த போது அவரது கணவர் அமெரிக்காவின் வான் தாக்குதலில் உயிரிழந்தார்.
கைக்குழந்தையுடன் இருந்த பாத்திமா, 2019-ல் 400 பயங்கரவாதிகளுடன் ஆப்கன் படையினரிடம் சரணடைந்தார். அவரை சிறையில் அடைத்திருந்தனர். தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதும் சிறையிலிருந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளை விடுவித்தனர். பாத்திமாவும் குழந்தையுடன் விடுவிக்கப்பட்டார். கேரளாவைச் சேர்ந்தவர்களுடன் அவரை நாடு கடத்த ஆப்கன் அனுமதித்தது.
இந்நிலையில் அவரை மீண்டும் தாலிபான்களிடம் இந்திய அரசு ஒப்படைத்துவிட்டதாக அவரது தாய் பிந்து சம்பத் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் எனது மகளையும், பேத்தியையும் விடுவித்துவிட்டார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் புதன்கிழமை மாலையில், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை, இந்திய அரசால் பயங்கரவாதிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டனர் என்ற வருத்தமான செய்தியை அறிந்தேன்.
அவள் என் நாட்டிற்கு ஏதாவது தவறு செய்திருந்தால் இந்திய சட்டப்படி தண்டியுங்கள். அதைத்தான் நான் நான்கு வருடங்களாக கூறி வருகிறேன். அவள் ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்டால், நான் என் பேத்தியை கவனித்துக் கொள்வேன்.
இல்லையென்றால் அவள் பயங்கரவாதிகளுக்கு இரையாகிவிடுவாள். 2017-ல் அவள் கோச்சிங் சென்டருக்கு படிக்க போன இடத்தில் பயங்கரவாதிகளாலும், அவளுடன் இருந்த மருத்துவர் ஒருவராலும் மூளைச்சலவை செய்யப்பட்டாள் என கூறியுள்ளார்.