ஹெல்மெட் அணியாமல் ட்ராபிக் சிக்னல் கமெராவில் மாட்டிய கணவர்: விவாகரத்து கோரிய மனைவி
கேரளாவில் ஹெல்மெட் அணியாமல் ட்ராபிக் சிக்னல் சிசிடிவி கமெராவில் சிக்கியதால், அவரின் குடும்பத்தில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் பயணம்
கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர், கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி தனது வீட்டிலுள்ள ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். ஹெல்மெட் அணியாமல் சென்ற அவரை சாலை சிக்னலில் இருந்த சிசிடிவி கேமரா படம் பிடித்துள்ளது.
மேலும் அவரது வண்டி எண்ணை வைத்து குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு, அபராதம் கட்ட வேண்டிய விவரத்துடன், சிசிடிவி புகைப்படத்தை அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இரு சக்கர வாகனம் அந்த நபரின் மனைவி பெயரிலிருக்க, அந்த நபர் வசமாக சிக்கியுள்ளார். சிசிடிவியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தன் கணவரோடு பைக்கில், இன்னொரு பெண் உட்கார்ந்து வந்தது அம்பலமாகியுள்ளது.
மனைவியிடம் மாட்டிய கணவர்
இதனை அடுத்து ஆத்திரமடைந்த அந்த மனைவி, கணவரிடம் அந்த புகைப்படத்தை காட்டி யார் அந்த பெண் என கேட்டுள்ளார். அதற்கு கணவர் அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுத்ததாக கூறி சமாளித்துள்ளார்.
ஆனால் அவர் மனைவி இதனை நம்புவதாக இல்லை, எனவே கணவரை தொடர்ந்து விசாரிக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதனை தொடர்ந்து தன்னையும், 3 குழந்தைகளையும் கணவர் தாக்கியதாக கூறி அவரது மனைவி காவல்துறையிடம் புகார் கூறியுள்ளார்.
விவாகரத்து கோரிய மனைவி
இந்நிலையில் காவல்துறை அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும் அவரது மனைவி, விவாகரத்து கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதோடு, நெட்டிசன்கள் பலரும் இதனை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.