நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் பலி: தமிழ்நாட்டிற்கும் பரவுமா?
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளமையால், தமிழ்நாட்டு மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர்.
நிபா வைரஸ்
நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒருவகை காய்ச்சல். வௌவால்கள், குதிரைகள், ஆடுமாடுகள், நாய்கள், பூனைகள் போன்ற பலவகை விலங்குகள் மூலமாக வேகமாகப் பரவக்கூடியது நிபா வைரஸ்.
இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கேரளா மாநிலத்திற்கு இரண்டு பேர் அடங்கிய சுகாதார குழுவினரை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த குழு கேரளா மாநிலத்தில் நிலவும் சூழல் பற்றி ஆய்வு செய்யவுள்ளதுடன், மேலும் நிபா வைரஸ்சினால் பீடிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்கள்.
மேலும் தலைவலி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தெரிவதுடன், சிலருக்கு மூளை பாதிப்பு ஏற்படுத்தி மரணத்தையும் ஏற்படுத்தும். இது குறித்து தமிழ் நாட்டு மக்கள் அச்சத்தில் இருகின்றனர்.
தமிழ் நாட்டிற்கு பாதிப்பு வருமா?
தமிழ் நாட்டில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை எனவும் அது தொடர்பாக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டங்களாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவின் எல்லையோர பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவ அதிகாரிகள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை கண்காணித்து காய்ச்சல் அறிகுறியுடன் எவரேனும் உள்ளனரா என்பது குறித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
காய்ச்சல் பாதிப்பு இருப்போருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் வைத்து ஊடகங்களுக்கு தமிழ் நாட்டு சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |