ரஷ்யா- உக்ரைன் போர் 85வது நாள்: இதுவரையான முக்கிய நிகழ்வுகள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 85வது நாளை எட்டியுள்ள நிலையில், நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு வெளியாகியுள்ளது.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் அமைந்துள்ள Azovstal உருக்காலையில் போரிட்டு வந்த 771 உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் இதுவரை 1,730 உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தற்போது ரஷ்ய துருப்புகளால் கைப்பற்ரப்பட்டுள்ள மரியுபோல் நகரம் மட்டுமின்றி, உக்ரைன் தெற்கு நகரங்களான கெர்சன், மெலிடோபோல், பெர்டியன்ஸ்க், எனர்ஹோடார் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை மீளப் பெறுவதில் தாங்கள் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார்.
இதனிடையே, ரஷ்ய இராணுவ தளவாடங்களுடன் சென்ற இரயில் ஒன்றை உக்ரைன் தரப்பு தகர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24ம் திகதி ரஷ்ய படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் இதுவரை உக்ரைன் மீது 2,000 ஏவுகணைகளை புடின் தரப்பு ஏவியுள்ளது.
Dnepropetrovsk பிராந்தியத்தில் ரஷ்ய துருப்புகள் கடுமையான தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையில் பெரும்பாலான மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளானதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 24 முதல் ரஷ்ய படையெடுப்பு காரணமாக குறைந்தது 231 குழந்தைகள் இறந்துள்ளனர் மற்றும் 427 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைனின் மனித உரிமைகள் ஆம்புட்ஸ்மேன் கூறியுள்ளார்.
இதனிடையே, அவசரகால உணவு உதவியாக உக்ரைனுக்கு 215 மில்லியன் டொலர்களை அமெரிக்கா அறிவித்தது. உக்ரைனுக்கான உதவியை 600 மில்லியன் டொலர்களாக இரட்டிப்பாக்குவதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் தூண்டப்பட்ட உணவுப் பாதுகாப்பு நெருக்கடியைத் தடுக்க உலக வங்கி 30 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாகக் கூறியுள்ளது.