கடத்தப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவிப்பதாக கூறப்பட்ட துபாய் இளவரசி புகைப்படம் வெளியானது
தந்தையால் கடத்தப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவிப்பதாக கூறப்பட்ட துபாய் இளவரசியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இளவாரசி லதிபா அல் மக்தூம் என்பவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வெளியாகியுள்ள புகைப்படத்தில் இளவரசி லதிபா அல் மக்தூம், வணிக வளாகம் ஒன்றில் தமது இரு நண்பர்களுடன் காணப்படுகிறார்.
இளவரசி லதிபா அல் மக்தூம் உயிருடன் இருக்கிறாரா என்பதற்கு ஆதாரம் தேவை என ஐக்கிய நாடுகள் சபை ஆதரவுடன் செயல்படும் ஆர்வலர்கள் குழு ஒன்று கோரியிருந்த நிலையிலேயே தொடர்ந்து இரு புகைப்படங்களை துபாய் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் தான் 34 வயதான லதிபா அல் மக்தூம், குடும்பத்தினரால் தாம் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக காணொளி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் இளவரசி லதிபா அல் மக்தூம் மகிழ்ச்சியுடன் இருப்பதையே குறிப்பதாக தெரிவித்துள்ள அந்த ஆர்வலர்கள் குழு,
இளவரசி லதிபா அல் மக்தூம் விருப்பப்படி ஐக்கிய அமீரகத்தில் இருந்து வெளியேற துபாய் நிர்வாகம் அனுமதிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை முதல் புகைப்படம் வெளியான நிலையில் சனிக்கிழமை இரண்டாவது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே புகைப்படங்களின் உண்மைத்தன்மையும் ஆராயப்பட்டு, சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் தான் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.