'ரூ.10 லட்சம் தரலன்னா மகனை கொன்னுடுவோம்' போன் மூலம் எம்.பிக்கு மிரட்டல்
இந்திய மாநிலம் உத்திரபிரதேச பாஜக எம்.பி ரமேஷ் சந்த் பிந்த்க்கு, ரூ.10 லட்சத்தை தரவில்லை என்றால் உங்களது மகனை கொன்று விடுவோம் என்று போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைபேசி மூலம் மிரட்டல்
உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மக்களவைத் தொகுதியின் எம்பி.யாக ரமேஷ் சந்த் பிந்த் இருக்கிறார். இவருக்கு மர்மநபர் ஒருவர் இரண்டு நாள்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார்.
அப்போது அந்த மர்ம நபர்,"10 லட்ச ரூபாயை கொடுங்கள். அப்படி தரவில்லையென்றால் உங்களது மகனை கடத்தி கொலை செய்து விடுவோம்" என்று கூறி எம்.பி.க்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
பாஜக எம்.பி புகார்
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பி ரமேஷ் சந்த் பிந்த் கூறுகையில்,"ஆகஸ்ட் 7 ஆம் திகதி இரவு 9 மணியளவில் டெல்லியில் உள்ள எனது வீட்டில் நான் இருந்தேன். அப்போது எனக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
அந்த நபர், 10 லட்சம் ரூபாயை தரும்படியும், நான் சொல்வதை செய்யும்படியும் கூறினார். அவ்வாறு செய்யவில்லை என்றால் உங்கள் மகனை கடத்தி கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார்.
பின்னர் அவர், தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதால் இணைப்பை துண்டித்தேன். இது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்துள்ளேன்" என்றார்.
இச்சம்பவம் குறித்து, டெல்லி வடக்கு காவல் நிலைய பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஒருவரை பிடித்து விசாரணை செய்தும் வருகின்றனர். தற்போது, பாஜக எம்.பிக்கு வந்த தொலைபேசி மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |