தாலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாகும் பஞ்ச்ஷிரின் சிங்கங்கள்: வந்தால் திரும்பமாட்டீர்கள் என எச்சரிக்கை
பஞ்ச்ஷிரின் வடக்கு கூட்டணி கடும் போராட்டத்திற்கு பிறகு ஒரு மணி நேரத்தில் 41 தாலிபான்களை கொன்று தள்ளியதுடன் 20 பேர்களை சிறை பிடித்துள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்ச்ஷிர் மலைப்பகுதியை கைப்பற்றும் நோக்கில் தாலிபான்கள் முன்னெடுத்த தாக்குதலை வடக்கு கூட்டணி வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். கசா பகுதில் நடந்த தாக்குதலில் 34 தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 மணி நேரத்தில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பஞ்ச்ஷிர் மலைப்பகுதியில் நுழைய உங்களை அனுமதிப்போம், ஆனால் இங்கிருந்து உயிருடன் வெளியேற முடியாது என வடக்கு கூட்டணி மிரட்டல் விடுத்துள்ளது.
இதனிடையே கவாக் பகுதி தாக்குதலில் மொத்தம் 350 தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 40 தாலிபான்களை சிரைபிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தங்கள் வசம் அமெரிக்க ஆயுதக்குவியல்கள் சிக்கியுள்ளதாகவும், இதனால் போராட்டம் மேலும் இறுகும் எனவும் வடக்கு கூட்டணி அறிவித்துள்ளது.
அமெரிக்க துருப்புகள் வெளியேறிய பின்னர் பஞ்ச்ஷிர் பகுதியை கைப்பற்றும் தாலிபான்களின் கடும் முயற்சிகள் இதுவரை தோல்வியிலும் பேரிழப்பிலும் முடிந்து வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள தாலிபான்கள் பஞ்ச்ஷிர் பகுதிக்கு மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்பகுதி உணவு கொண்டு செல்லும் பாதைகளை தாலிபான்கள் முன்னர் மூடியிருந்தும், ஒருபோதும் தங்கள் படைகள் சரணடையாது என்றே வடக்கு கூட்டணி அறிவித்துள்ளது.