தாலிபான்களிடம் இருந்து தப்ப... விமானத்தின் டயரில் சிக்கி மரணமடைந்தவர் இவர் தான்: வெளியான புகைப்படம்
காபூல் நகரில் இருந்து புறப்பட்ட அமெரிக்க சரக்கு விமானத்தின் டயரில் சிக்கி பலியானவர்களில் ஒருவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல் முதன் முறையாக வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை துப்பாக்கி முனையில் கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகள் இன்னும் சில நாட்களில் உத்தியோகப்பூர்வமாக ஆட்சி அமைக்க உள்ளனர்.
இந்த நிலையில், தாலிபான்களுக்கு பயந்து அப்பாவி பொதுமக்கள் நாட்டைவிட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ விமானங்களில் மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனனர்.
கடந்த ஞாயிறன்று, காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க சரக்கு விமானத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கால்நடைகள் போல ஏற்றிச்செல்லப்பட்டனர்.
அப்போது சிலர் அந்த விமானத்தின் டயர் பகுதியில் பதுங்கியிருந்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், அதில் மூவர் தவறி விழுந்து உடல் சிதைந்து பலியானார்கள். அதில் ஒருவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
19 வயதேயான Zaki Anwari என்ற இளைஞரே அமெரிக்க விமானத்தின் டயரில் சிக்கி பலியானவர்களில் ஒருவர். குறித்த தகவலை உள்ளூர் பத்திரிகை ஒன்றும் உறுதி செய்துள்ளது. மட்டுமின்றி Zaki Anwari ஆப்கானிஸ்தானில் இளம் கால்பந்து வீரர்களில் ஒருவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், குறித்த சரக்கு விமானம் கட்டார் நாட்டில் தரையிறக்கப்பட்ட பின்னர் டயர் பகுதியில் இருந்து மனித உடல் பாகங்களை அமெரிக்க ராணுவத்தினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.
காபூலில் இருந்து புறப்பட்ட அந்த அமெரிக்க சரக்கு விமானத்தில் இருந்து மனிதர்கள் கீழே விழுவது புகைப்படம் மற்றும் காணொளியாக வெளியாகி உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.