குடும்பம் குடும்பமாக வேட்டையாடப்படும் கொடூரம்: சிரியா குறித்து அதிர்ச்சியை பதிவு செய்த ஐ.நா
வடமேற்கு சிரியாவில் முழு குடும்பங்களும் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகள் மிகவும் கவலை அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கவலையளிக்கும் தகவல்கள்
வன்முறைகள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கொலைகள் குறித்து விரைவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவின் அலவைட் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் பகுதியில் வியாழக்கிழமை சிரியாவின் பாதுகாப்புப் படையினருக்கும் முன்னாள் அரசாங்கத்தின் விசுவாசிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
ஆனால் அதன் பின்னர் அவை கூட்டக் கொலைகளாகப் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வோல்கர் டர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்கள், குழந்தைகள் மற்றும் போராளிகள் உட்பட முழு குடும்பங்களும் கொல்லப்படுவதாக மிகவும் கவலையளிக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
வடமேற்கு சிரியாவின் கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமாக கொல்லப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இதனிடையே, சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா ஞாயிற்றுக்கிழமை தேசிய ஒற்றுமை மற்றும் அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், சட்டத்தை மதிக்குமாறு நாட்டின் அதிகாரிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, சிரியர்களைப் பாதுகாப்பதற்கும், துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பேற்பதை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வோல்கர் டர்க் கூறினார்.
அத்துடன் அனைத்து கொலைகள் மற்றும் பிற மீறல்கள் குறித்தும் விரைவான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், மேலும் பொறுப்பானவர்கள் சர்வதேச சட்ட விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
கூட்டாக கொல்லப்பட்ட சம்பவம்
மட்டுமின்றி, பொதுமக்களை அச்சுறுத்தும் குழுக்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வோல்கர் டர்க் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வியாழக்கிழமை தொடங்கிய இந்தத் தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவைச் சேர்ந்த சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்துள்ளது.
இதில் 745 பொதுமக்கள், 125 சிரிய பாதுகாப்புப் படையினர் மற்றும் 148 அசாத் விசுவாசிகள் அடங்குவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் 4,000 அசாத் விசுவாசிகள் ஈடுபட்டதாக சிரியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் ஆலோசகர் ஒருவர் மதிப்பிட்டுள்ளார்.
சிரிய பாதுகாப்பு அதிகாரிகளின் உடல்கள் தெருக்களில் சிதறிக் கிடப்பதையும், கடலோர மாகாணமான டார்டஸில் உள்ள ஒரு பொதுமக்களுக்கான கல்லறைத் தோட்டத்தில் அவசர அவசரமாக புதைக்கப்பட்ட உடல்களையும் வெளியான காணொளி ஒன்றில் பதிவாகியுள்ளது.
ஒரேயடியாக 40 பேர்கள் கூட்டாக கொல்லப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர்கள் மொத்தமாக கொல்லப்பட்டதையும் நேரில் பார்த்தவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் சிறுபான்மை மக்களுக்கான மரியாதை பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் என்று மேற்கத்திய வல்லரசு நாடுகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |