வடகொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோளின் ஏவுதல்! மகளுடன் சேர்ந்து ஆய்வு செய்த கிம்..வெளியான புகைப்படங்கள்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது மகளை விண்வெளி தலைமையகத்திற்கு அழைத்துச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கிம்மின் 10 வயது மகள்
கிம் ஜாங் உன்னிற்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் என மூன்று பிள்ளைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அவரது 10 வயது மகள் வடகொரிய இராணுவத்தின் 75வது நிறுவன ஆண்டு விழாவைக் குறிக்கும் இராணுவ அணிவகுப்பில் தந்தையுடன் தோன்றினார்.
அதேபோல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கால்பந்து விளையாட்டு உட்பட முக்கிய நிகழ்வுகளின் தொடரில் சமீபத்தில் தோன்றினார்.
உளவு செயற்கைக்கொள் ஆய்வு
இந்த நிலையில், வடகொரியாவின் விண்வெளி தலைமையகத்தில் கிம் தனது மகளுடன் தோன்றினார். அங்கு வடகொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோளின் திட்டமிடப்பட்ட ஏவுதலுக்கான ஆயத்தங்களைப் பார்ப்பதில், தந்தை-மகள் இருவரும் நேரம் செலவிட்டனர்.
கிம் தனது கையில் சிகரெட்டை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும்போது, அருகில் 10 வயது மகள் நின்றிருக்கிறார். அதேபோல் அதிகாரிகளுடன் கிம் உரையாடுவதை அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதிகாரப்பூர்வ விண்வெளி நிறுவனத்திற்கு கிம் சென்றபோது, ஏவுதல் சரியான நேரத்தில் நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளிடம் கூறியதாகவும், தொடர்ச்சியான உளவு செயற்கைக்கோள்களை ஏவுமாறும் உத்தரவிட்டார் என KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பறப்பு சோதனையில் கிம்மின் மகள் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.