வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்பில் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல்
வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் கிட்டத்தட்ட 10 முதல் 20 கிலோ வரை எடை குறைந்துள்ளதாக தென்கொரிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினரான Kim Byung-kee என்பவர், வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன், கிட்டத்தட்ட 10 முதல் 20 கிலோ வரை எடை குறைந்துள்ளதாகவும், ஆனால், அவருக்கு உடல் நல பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தென்கொரிய உளவுத்துறை தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
ஒருவேளை வடகொரிய அதிபருக்கு உடல் நலனில் பிரச்சினைகள் ஏதாவது இருக்குமானால், அவரது உடல் நலனை கவனித்துக்கொள்ளும் மருத்துவமனைக்கு மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும்.
ஆனால், அதற்கான அறிகுறிகள் அதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ள Byung-kee, இப்போதும் கிம் பல மணி நேரங்கள் கூட்டங்கள் நடத்துகிறார், அத்துடன் அவரது நடையிலும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
37 வயதாகும் கிம், மே மாதம் பெரிய அளவில் வெளியே தலைகாட்டவில்லை. அவர் ஜூன் மாதம் திரும்ப அரசாங்க கூட்டம் ஒன்றில் பங்கேற்கும் வீடியோ ஒன்றைப் பார்க்கும்போது, அவர் மிகவும் மெலிந்திருப்பது தெரியவந்தது.
அத்துடன் அவரது மெலிந்த உருவத்தைக் கண்ட வடகொரிய மக்கள் கண்ணீர் விட்டு அழுததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
வடகொரிய அதிபரின் குடும்பத்தினருக்கு இதய பிரச்சினை உள்ளது என்பதால், கிம் எப்படி இருக்கிறார் என்பதை எப்போதும் தென்கொரிய உளவுத்துறை கவனித்துக்கொண்டிருப்பது வழக்கம்.
தென்கொரிய உளவுத்துறை, நவம்பரில் கிம் 140 கிலோ எடை இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளது.