தந்தைக்கு 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காவலர் பணி! மரியாதையை மீட்டெடுத்த உலக சாம்பியன்
இந்திய கிரிக்கெட் வீராங்கனை கிராந்தி கவுட்டின் தந்தைக்கு மீண்டும் காவல் பணி கிடைத்துள்ளது.
கிராந்தி கவுட்
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக்கிண்ணத்தை வென்று சரித்திரம் படைத்தது. 
இந்தத் தொடரில் பந்துவீச்சாளர் கிராந்தி கவுட் மிரட்டலாக பந்துவீசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் குவாரா கிராமத்தைச் சேர்ந்த ஏழை குடும்பத்து பெண்ணான கிராந்தி கவுட், இந்த வெற்றியின் மூலம் தனது குடும்பத்திற்கு பெருமை சேர்த்ததுடன் நிலையையும் உயர்த்தியுள்ளார்.
தன் திறமையால் வறுமையை போக்கியது மட்டுமல்லாமல், தனது தந்தையின் இழந்த மரியாதையையும் மீட்டெடுத்துள்ளார்.
அதாவது, காவல்துறையில் பணியாற்றிய கிராந்தியின் தந்தை முன்னா சிங் கவுட் தனது வேலையை இழந்தார். தேர்தல் பணியின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் தவறு காரணமாக அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
2012ஆம் ஆண்டில் முன்னா சிங் பணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், கிராந்தியின் குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது.
13 ஆண்டுகளுக்கு பிறகு
இந்த நிலையில்தான் 13 ஆண்டுகளுக்கு பிறகு, தனது தந்தை இழந்த பணியை பெற வழிவகுத்துள்ளார் கிராந்தி.
கிராந்தியின் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக, அவரது தந்தையை மீண்டும் காவலராக நியமித்து மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்தார்.
மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்த கிராந்தியை பாராட்டியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர், அவரது தந்தையின் கண்ணியம் மீட்டெடுக்கப்பட்டது சரியானது என்று கூறினார்.
இதுகுறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிய கிராந்தி கவுட், தந்தையின் பணிநீக்கத்திற்குப் பிறகு தனது குடும்பம் பெரும்பாலும் உணவுக்காக அண்டை வீட்டாரை நம்பியிருந்ததாகக் தெரிவித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |