பங்கரில் பதுங்கியிருப்பதாக மேற்கத்திய நாடுகளின் பரப்புரை... ரஷ்யா வெளியிட்ட புடினின் காணொளி
மாஸ்கோவில் விளாடிமிர் புடின் காரில் பயணிப்பதும், ஒரு ஹொட்டல் வரவேற்பறையில் தனது முன்னாள் பள்ளி ஆசிரியர் ஒருவரைச் சந்திப்பதும் அடங்கிய காணொளியை ரஷ்ய ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது.
படுகொலை முயற்சி
ரஷ்ய ஜனாதிபதி புடின் பல வாரங்களாக பங்கரில் முடங்கிக் கிடப்பதாக, ஐரோப்பிய உளவுத்துறையின் அறிக்கை ஒன்றைக் குறிப்பிட்டு மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே தொடர்புடைய காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனிக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் விதமாக, புடின் ஆண்டுதோறும் மே 9 அன்று செஞ்சதுக்கத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்வுகளுக்கு முன்பே அந்த அறிக்கைகள் வெளிவந்தன.
அதில், அவரைச் சுற்றிய பாதுகாப்பு கடுமையாக வலுப்படுத்தப்பட்டிருப்பதாகவும்; படுகொலை முயற்சி அல்லது ஆட்சிக்கவிழ்ப்பு குறித்த அச்சத்தின் காரணமாக, அவர் வாரக்கணக்கில் பங்கரில் பதுங்கியிருந்தபடியே உக்ரைன் போரை கண்காணித்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ரஷ்ய அதிகாரிகள் தரப்பு அதை முற்றாகப் புறக்கணித்துள்ளதுடன், அப்படி ஒரு சூழல் உருவாகவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.
பூங்கொத்துடன்
இந்த நிலையில், திங்களன்று வெளியிடப்பட்டுள்ள காணொளியில், சர்வசாதாரணமாக புடின் ஹொட்டல் அருகே தமது வாகனத்தை நிறுத்தி, அதன்பின், தனது பழைய பள்ளி ஆசிரியர்களில் ஒருவரைச் சந்திப்பதற்காக, கையில் ஒரு பெரிய பூங்கொத்துடன் வரவேற்பறைக்குள் செல்வது பதிவாகியுள்ளது.
73 வயதான புடின் ஜீன்ஸ் மற்றும் ஒரு மெல்லிய ஜாக்கெட் அணிந்து சாதாரணமாக உடையணிந்திருந்திருந்தார். தனது ஆசிரியரை சந்தித்துவிட்டு, வழியில் தற்செயலாகச் சென்றுகொண்டிருந்த ஒருவருடன், வானிலை குறித்துச் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்த நிலையில் காணப்பட்டார்.
1999-ஆம் ஆண்டிலிருந்து ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ அதிகாரத்தில் இருந்து வரும் புடின், அண்மைய மாதங்களில் இவரது செல்வாக்குச் சரிந்திருந்தாலும், அது தற்போதும் உயர் நிலையிலேயே உள்ளது. 2030ல் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |