லட்டு உருட்டவே 5 நிமிடம் தான்.., ஆனால் 50 நாள்களாக உருட்டுகிறார்கள் என பவன் கல்யாணை விமர்சித்த சீமான்
லட்டு விவகாரத்தில் சனாதனம் குறித்து பேசிய பவன் கல்யாணை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
பவன் கல்யாண் பேசியது
திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், "இங்கு அதிகமான தமிழ் மக்கள் இருப்பதால் தமிழில் சொல்கிறேன். தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை வைரஸ் என்று சொல்கிறார்கள்.
இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு ஒன்று சொல்கிறேன். இந்த மாதிரி பல பேர் சொல்லியிருக்கிறார்கள். அதில் நீங்கள் முதல் ஆளும் இல்லை, கடைசி ஆளும் இல்லை.
சனாதன தர்மம் எப்போதும் அப்படியே தான் நிலைத்திருக்கிறது. அதை தடுக்க முடியாது" என்று பேசியிருந்தார்.
சீமான் பேசியது
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் பவன் கல்யாணின் சனாதனக் கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "பெருமாள் ஆடு மாடு மேய்த்த எங்க கூட்டத்தின் இறைவன். நெய் பட்டால் கொழுப்பு பட்டால் தீட்டு என்பது வேடிக்கை. இதில் கூட அரசியல் செய்வதா? இது உணர்வுப்பூர்வமான பிரச்சனை என்று நடிகர் கார்த்தி சொல்லி முடித்துவிட்டார்.
அதோடு நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், மீண்டும் நெறியாளர் கேள்வி கேட்கிறார். 5 நிமிடத்தில் பிரச்சனையை முடித்திருக்க வேண்டும்.
லட்டு உருட்டவே 5 நிமிடம்தான். ஆனால், இதனை 50 நாள்களாக உருட்டிக் கொண்டிருக்கிறார். சனாதனம் குறித்து பவன் கல்யாண் பேசினால் நாங்களும் மேடை போட்டு பேசுவோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |