சுற்றுலா பயணிகளுக்கு நற்செய்தி.., மாலத்தீவில் UPI பண பரிவர்த்தனை அறிமுகம்
இந்தியா உருவாக்கிய யுபிஐ (UPI) கட்டமைப்பை இந்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு அறிமுகம் செய்துள்ளார்.
UPI என்பது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) உருவாக்கிய உடனடி கட்டண முறை ஆகும்.
மேலும் UPI பணப்பரிவர்த்தனை IMPS உள்கட்டமைப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரின் வங்கிக் கணக்குகளுக்கு இடையில் உடனடியாக பணத்தை மாற்ற அனுமதிக்கிறது.
தற்போதைய காலத்தில் நாம் பணம் அனுப்புவதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் வீட்டில் இருந்தபடியே கையில் இருக்கும் மொபைல் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம்.
முக்கியமாக யுபிஐ வந்தபிறகு பணம் அனுப்புவதற்கு இன்னும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, பேடிஎம், போன்பே என எந்த யுபிஐ முறை என்றாலும் மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். எங்கு சென்றாலும் துணிக்கடை முதல் டீக்கடை வரை UPI மூலம் தான் பணம் செலுத்துகின்றனர். அந்த அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
அந்தவகையில், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டமைப்பை இந்தியா உருவாக்கி உள்ளது.
மாலத்தீவில் UPI
யுபிஐ தொடர்பாக இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே கடந்த ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது மாலத்தீவில் யுபிஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘ட்ரேட்நெட் மாலத்தீவு கார்ப்பரேஷன்’ நிறுவனமானது யுபிஐ கட்டமைப்பை நிர்வகிக்கும் பணியை மேற்கொள்கிறது.
இதுகுறித்து அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு கூறுகையில், "மாலத்தீவு வங்கிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், ஃபின்டெக் நிறுவனங்கள் ஆகியவை யுபிஐக்கு பங்களிப்பு வழங்க வேண்டும்" என்றார்.
மாலத்தீவின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பங்களிப்பு அந்நாட்டின் ஜிடிபியில் 30 சதவீதமாக உள்ளது. அதன்படி, யுபிஐ அறிமுகம் மூலம் அந்நாட்டின் பணப் பரிவர்த்தனை அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |