இதற்கு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்: WhatsApp தரப்பு
பாதுகாப்பு அம்சமான End to End Encryption -யை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என்று வாட்ஸ் ஆப் (WhatsApp) நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
WhatsApp செயலி
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் WhatsApp செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவான தகவல் பரிமாற்றத்தின் காரணமாகவும், தகவல்கள் பத்திரமாக வைத்துக் கொள்வதன் காரணமாகவும் பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் -அப் நிறுவனமானது 512 Bit encryption என்ற பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்தி தகவலில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் சேமித்து வைக்கிறது.
இந்த செய்தியை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகும். இதனால் பயனாளர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும்.
WhatsApp தரப்பு வாதம்
இந்நிலையில் இந்திய அரசு கடந்த 2021 -ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மாற்றத்தை கொண்டு வந்தது.
இந்த சட்டத்தை Facebook மற்றும் WhatsApp நிறுவனங்கள் மீறுவதாக குற்றம் சாட்டியது. இதனை எதிர்த்து நிறுவனங்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கானது நேற்று நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது.
அப்போது இந்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் WhatsApp encryption காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் இருப்பதாக கூறினார். மேலும், நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமை சீர்குலைத்து விடும் என்றும் கூறினார்.
இதற்கு WhatsApp தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா கண்டனம் தெரிவித்ததோடு, "உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற சட்டங்கள் இல்லை. இந்த சட்டம் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை ஆகியவற்றை மீறுகிறது.
WhatsApp பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் End to End Encryption -யை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்" என்று தெரிவித்தார்.
பின்னர், இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் மூலமாக, WhatsApp -ல் அனுப்பப்படும் தகவல்கள் தொடர்பாக சந்தேகம் எழும் பட்சத்தில் அரசு கோரும் போது, என்கிரிப்ஷனை உடைத்து வாட்ஸ் அப் நிறுவனம் தகவல் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |