உடனடியாக வெளியேறுக... ஈரானில் அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் அவசர எச்சரிக்கை
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இறுகும் நெருக்கடியை அடுத்து, ஈரானில் உள்ள தனது குடிமக்களை அந்த நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.
முன்னறிவிப்பின்றி ஏற்படலாம்
இணையமூடாக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க நிர்வாகம், நாடு முழுவதும் அமைதியின்மை மற்றும் பயணத் தடங்கல்கள் நீடிப்பதால், அமெரிக்கக் குடிமக்கள் அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைச் சாராத ஒரு வெளியேறும் திட்டத்தை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவும் அதன் பரம எதிரியான ஈரானும், 1979-ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி மற்றும் ஈரானில் நடந்த தூதரக பணயக்கைதிகள் நெருக்கடிக்குப் பிறகு, கடுமையான பகைமையில் இருந்து வருகிறது.
இருப்பினும், 2025 டிசம்பர் பிற்பகுதியில் தொடங்கிய பாரிய போராட்டங்கள் மீதான ஈரானின் கொடூரமான அடக்குமுறைக்கு பதிலடியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அச்சுறுத்தியதிலிருந்து பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
அத்துடன் மத்திய கிழக்கில் போர் கப்பல்களையும் ட்ரம்ப் அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில், ஈரானில் இணையச் சேவை முடக்கம் தொடரும் என்று அமெரிக்க மக்கள் எதிர்பார்க்க வேண்டும். அவர்கள் மாற்றுத் தகவல் தொடர்பு வழிகளைத் திட்டமிட வேண்டும், மேலும் பாதுகாப்பாக இருக்குமானால், தரைவழி மார்க்கமாக ஆர்மீனியா அல்லது துருக்கிக்குச் செல்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
விமான ரத்துகள் மற்றும் பயணத் தடங்கல்கள் எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி ஏற்படலாம். சமீபத்திய தகவல்களுக்கு உங்கள் விமான நிறுவனத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.
உங்களால் வெளியேற முடியாவிட்டால், உங்கள் வசிப்பிடத்திற்குள் ஒரு பாதுகாப்பான இடத்தையோ அல்லது வேறு பாதுகாப்பான கட்டிடத்தையோ கண்டறியுங்கள். உணவு, தண்ணீர், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைத் கையிருப்பில் வைத்திருங்கள்.
ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்கவும், வெளிப்படையாகத் தெரியாமல் நடந்துகொள்ளுங்கள், மேலும் உங்களைச் சுற்றியுள்ள சூழல் குறித்து விழிப்புடன் இருங்கள் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
போதுமான காரணமாக
மேலும், ஈரானிய கடவுச்சீட்டுகள் மூலம் மட்டுமே அமெரிக்க-ஈரானிய இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ஈரானிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. ஈரான் அரசாங்கம் இரட்டை குடியுரிமையை அங்கீகரிப்பதில்லை, மேலும் அமெரிக்க-ஈரானிய இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை முற்றிலும் ஈரானிய குடிமக்களாகவே கருதப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, ஈரானில் அமெரிக்கக் குடிமக்கள் விசாரணை, கைது மற்றும் தடுப்புக் காவலுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளனர். அமெரிக்க கடவுச்சீட்டைக் காட்டுவது அல்லது அமெரிக்காவுடனான தொடர்புகளை வெளிப்படுத்துவது, ஈரானிய அதிகாரிகளால் ஒருவரைக் கைது செய்வதற்குப் போதுமான காரணமாக அமையலாம்.

தங்களிடம் செல்லுபடியாகும் அமெரிக்க கடவுச்சீட்டு இல்லாத அமெரிக்கக் குடிமக்கள், ஈரானிலிருந்து வெளியேறிய பிறகு, அருகிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, ட்ரம்ப்பின் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்காவும் ஈரானும் ஓமானில் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |