அமெரிக்க மக்களுக்கு 48 மணி நேர கெடு: இராணுவம் மீட்காது என எச்சரிக்கை
உக்ரைனில் தங்கியுள்ள அமெரிக்க மக்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது போர் தொடுக்கலாம் எனவும், அமெரிக்க மக்கள் எவரையும் மீட்க இராணுவம் உக்ரைனுக்கு வர வாய்ப்பில்லை எனவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து அமெரிக்க மக்களும் உக்ரைன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என சல்லிவன் குறிப்பிட்டுள்ளார். 24 மணி நேரம், அதிகபட்சமாக 48 மணி நேர அவகாசம் மட்டுமே என குறிப்பிட்டுள்ள சல்லிவன், ஆபத்தும் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளபடியால் விவேகமாக செயல்படுவதே முதன்மையானது என குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்து என உணர்ந்தும், தங்கியிருக்க முடிவு செய்தால், இன்னொரு வாய்ப்பு கண்டிப்பாக அமையாது என்றே சல்லிவன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, 3,000 கூடுதல் துருப்புகளை அமெரிக்கா போலந்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
உக்ரைன் எல்லையில், மேலும் துருப்புகளை ரஷ்யா குவித்து வருவது, அடுத்தகட்ட நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்க இருப்பதாகவே கருத முடியும் என்றார் சல்லிவன்.
இந்த நிலையில், சுமார் 8,500 துருப்புகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தேவை கருதி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.