காஸா நிலைக்கு தள்ளப்படும் லெபனான்... நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் நிரம்பும் மருத்துவமனைகள்
ஹிஸ்புல்லா படைகள் ஆதிக்கம் செலுத்தும் லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் கடுமையான தாக்குதலை முன்னெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் எண்ணிக்கை
லெபனானின் சுகாதார அமைச்சர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் அனைத்து அவசரமற்ற அறுவை சிகிச்சைகளையும் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்களால் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், மருத்துவமனைகள் நிரம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக லெபனானின் தெற்கில் குடியிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையிலேயே ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மறைந்திருக்கும் பகுதிகளில் தாக்குதலை முன்னெடுப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை, லெபனானின் தலைநகர் பெய்ரூட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு குறுஞ்செய்திகளும் பதிவு செய்யப்பட்ட செய்திகளும் வெளியிடப்பட்டு, உடனடியாக தங்கள் குடியிருப்புகளை காலி செய்யும்படி இஸ்ரேல் ராணுவம் கோரியுள்ளது.
தாக்குதலுக்கு பதிலடி
லெபனானின் தகவல் தொடர்பு அமைச்சரும், அதுபோன்ற குறுந்தகவல் தமது அலைபேசிக்கும் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இது உங்கள் பாதுகாப்பு கருதி வெளியிடப்படும் தகவல் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹிஸ்புல்லா படைகள் சுமார் 150 ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஞாயிறன்று வடக்கு இஸ்ரேல் நோக்கி ஏவியது.
மேலும், பாலஸ்தீன மக்கள் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் ஹிஸ்புல்லா உறுதி அளித்துள்ளது.
இந்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தும் என்றால், காஸா நிலைக்கு லெபனான் நாடும் தள்ளப்படும் என போர் தொடர்பான நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |