வாங்க, ஒன்றிணைந்து போராடுவோம்... போரிஸ், மெர்க்கல் உட்பட உலகத் தலைவர்கள் கூட்டாக அழைப்பு
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஒரு உலகளாவிய ஒப்பந்தம் போன்று கொரோனாவுக்கு பிந்தைய உலகிற்கு புதிய ஒப்பந்தம் தேவை என்று போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள், கொரோனா பெருந்தொற்று என்பது ’எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாரும் பாதுகாப்பாக இல்லை என்பதை அப்பட்டமாகவும் வேதனையுடனும் நினைவூட்டுவதாக’ கூறியுள்ளனர்.
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும் தொற்றுநோய் தொடர்பான தயாரிப்புக்காகவும் ஒரு உலகளாவிய புதிய ஒப்பந்தத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட உலகின் 23 நாடுகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் உலகமெங்கும் இதுவரை 2.8 மில்லியன் மக்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
2019 ம் ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்றால் மொத்தம் 127 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகத் தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள கடிதத்தில், கொரோனா பெருந்தொற்றானது, 1940 களுக்கு பிறகு உலக சமூகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் புதிய சர்வதேச ஒப்பந்தத்தை நோக்கி நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
