சில நொடிகளில்... திருமண விழா கொண்டாட்டம் கண்ணீரில் மூழ்கிய சோகம்
வங்கதேசத்தில் திருமண நிகழ்வில் மின்னல் தாக்கியதில் 16 பேர் உடல் கருகி பலியானதுடன் மணமகனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு மாவட்டமான சபானவாப்கஞ்சில் நடந்த திருமண நிகழ்விலேயே மின்னல் தாக்கி மொத்த குடும்பத்தாரையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள இப்பகுதியில் நடந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பலத்த மழை காரணமாக ஓர் இடத்தில் ஒதுங்கி இருக்கின்றனர்.
அப்போது திடீரென அந்த இடத்தை மின்னல் தாக்கியதால் அடுத்தடுத்த நொடிகளில் 16 பேர் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் மணமகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணப்பெண் அந்த இடத்தில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். வங்கதேசத்தில் பெய்துவரும் பருவமழை அங்கு பெரும்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
தென்கிழக்கு மாவட்டமான காக்ஸ் பஜாரில் கடந்த ஒரு வாரமாக சூறாவளிக் காற்றுடன் பெய்துவரும் கனமழையால் 20க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
தெற்கு ஆசியாவில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கி நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்துவருகின்றனர். 2016ல் 200 பேர் மின்னல்தாக்கி இறந்திருக்கின்றனர். இதில் மே மாதத்தில் மட்டும் ஒரே நாளில் 82 பேர் மரணமடைந்துள்ளனர்.