பிரித்தானியர்கள் உட்பட 16 பேர்... லிஸ்பன் ட்ராம் விபத்தின் காரணம் வெளியானது
லிஸ்பனில் பிரித்தானியர்கள் உட்பட 16 பேர்கள் மரணமடைந்த ஃபனிகுலர் விபத்திற்கு ஒரு துண்டிக்கப்பட்ட கேபிள் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
6 நிமிடங்களிலேயே
சம்பவத்தின் போது அவசரகால பிரேக் இயக்கப்பட்டதாகவும், ஆனால் வேகமாக ஓடிய வண்டி மோதுவதைத் தடுக்க அது போதுமானதாக இருக்கவில்லை என்றும் முதல் உத்தியோகப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களில் 36 வயது Kayleigh Smith மற்றும் 44 வயது Will Nelson உள்ளிட்ட 3 பிரித்தானியர்கள், போர்த்துகல் நாட்டவர்கள் ஐவர், தென் கொரியா மற்றும் கனடா நாட்டவர்கள் தலா இருவர் மற்றும் சுவிட்சர்லாந்து, உக்ரைன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தலா ஒருவர் என மரணமடைந்துள்ளனர்.
விபத்தில் மரணமடைந்துள்ள மூன்றாவது பிரித்தானியர் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. விபத்து நடந்த பகுதியில் ட்ராம் புறப்பட்ட 6 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
50 வினாடிக்குள்
ஆனால் வாகனத்தை உடனடியாக நிறுத்த முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிய, மணிக்கு 37 மைல்கள் வேகத்தில் அந்த ட்ராம் கட்டிடம் ஒன்றின் மீது பாய்ந்துள்ளது.
மேலும், கேபிள் துண்டான 50 வினாடிக்குள் விபத்து நடந்துள்ளது. பேரழிவு சம்பவத்திற்குப் பிறகு, 150 ஆண்டுகள் பழமையான கேபிள் ரயில் அமைப்பின் தகுதி மற்றும் பராமரிப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
இருப்பினும், அனைத்து பராமரிப்பும் புதுப்பித்த நிலையில் இருப்பதாகவும், நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். துண்டான கேபிளை ஆய்வுக்கு உட்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
600 நாட்கள் பயன்பாடு கொண்ட அந்த கேபிளானது, இதுவரை 337 நாட்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. அதாவது அந்த கேபிள் மாற்றப்படுவதற்கு இன்னும் 263 நாட்கள் எஞ்சியுள்ளது. ஆனால் அது துண்டானதன் பின்னணி தொடர்பில் விசாரிக்கப்படும் என்றே அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |