லொட்டரி அதிபர் மார்ட்டினை விடாத அமலாக்கத்துறை: 3 -வது நாளாக தொடரும் ரெய்டு
லொட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
IT ரெய்டு
இந்திய மாநிலம், தமிழகத்தில் லொட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிக்கிம், மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு லொட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் தொழிலதிபர் மார்ட்டின் முக்கியமான பங்கு வகித்து வருகிறார்.
கடந்த 2009 மற்றும் 2010 -ம் ஆண்டு காலக்கட்டத்தில் சிக்கிம் மாநில லொட்டரி விதிமுறைகளை மீறி ரூ.910 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியதாக மார்ட்டின் மீது புகார் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து, கடந்த 2019 -ம் ஆண்டு லொட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமானத்துறை சோதனை நடத்தியது. அதன் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
3 -வது நாள்
இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது சட்டவிரோத பணபரிமாற்றத்தில் மார்ட்டின் ஈடுபட்டது தெரியவந்தது. பின்பு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர்.
அந்தவகையில், கடந்த மே மாதம் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்பு, இவருக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கொச்சின் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் கோவையில் உள்ள மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 3 இடங்களில் நடத்திய சோதனை, மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.
கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள லொட்டரி அதிபர் மார்ட்டினுக்கு வீட்டின் அருகே உள்ள தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரம் 6-வது வீதியில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல்கள் தெரியவரும்.