பேஸ்புக்கில் உருவான காதல்! காதலித்தவரை சந்திக்க பாகிஸ்தானுக்கு ஓட்டம் பிடித்த இந்திய பெண்
திருமணமான இந்தியப் பெண் ஒருவர் பேஸ்புக்கில் தான் நட்பாகப் பழகி காதலித்தவரை சந்திக்க பாகிஸ்தானிற்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பெண்ணுக்கு பேஸ்புக்கில் மலர்ந்த காதல்
உத்தரபிரதேசத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் ஜலான் மாவட்டத்தில் உள்ள கைலோர் கிராமத்தில் பிறந்தவர் 34 வயதான அஞ்சு. இவர், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் வசித்து வந்தார். இவரது கணவர் அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு, 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.
சமூக வலைதளமான பேஸ்புக்கில் அஞ்சுவும், பாகிஸ்தானைச் சேர்ந்த 29 வயதான நஸ்ருல்லா என்பவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். நஸ்ருல்லா மருத்துவத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் அப்பர் திர் மாவட்டத்தில் உள்ள தனது பாகிஸ்தான் நண்பரான நஸ்ருல்லாவைச் சந்திக்க அஞ்சு சென்றுள்ளார். அப்போது பாகிஸ்தான் பொலிசார் அஞ்சுவிடம் விசாரணை மேற்கொண்டதால் காவல்துறையின் பிடியில் இருந்தார்.
ஆனால், அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருந்ததால் அஞ்சு விடுவிக்கப்பட்டார். மேலும், நாட்டிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
என் மனைவி திரும்ப வருவார் என கணவர் உறுதி
ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு ராஜஸ்தான் காவல்துறையின் குழு பிவாடியில் உள்ள அஞ்சுவின் வீட்டிற்குச் சென்றது.
அப்போது, ஜெய்ப்பூர் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், ஆனால் அவர் பாகிஸ்தானில் இருப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்ததாகவும் அவரது கணவர் அரவிந்த் பொலிசாரிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், "2007-ம் ஆண்டு தாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். அவர் வெளிநாட்டில் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பியதால், 2020ல் பாஸ்போர்ட் வாங்கினார்.
சமூக வலைதளங்களில் யாருடனும் தொடர்பில் இருப்பது தனக்கு தெரியாது. என் மனைவி தன் தோழியை சந்திக்க வேண்டும் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறினார். சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் பேசிய போது அவள் லாகூரில் இருப்பதை அறிந்தேன்" என்று கூறினார்.
என் மனைவியிடம் தொடர்ந்து பேசுவதாகவும், அவர் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கணவர் அரவிந்த் கூறியுள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தானை சேர்ந்த சீமா குலாம் ஹைர் என்ற பெண் PUBG விளையாடும் போது இந்திய நபர் ஒருவரை காதல் கொண்டு இந்தியாவிற்கு சட்ட விரோதமாக நுழைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் இந்திய குடியுரிமை பெற முயற்சி செய்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |