அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவு.., மனமுடைந்த மாணவன் விபரீத முடிவு
அரையாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் 10 -ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மதிப்பெண் குறைவு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நேதாஜி நகரைச் சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன் மற்றும் கல்பனா. இதில் வெங்கடேசன் முடி திருத்தும் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 10 -ம் வகுப்பு படிக்கும் மாணவன் பவுன் குமார் இருந்தார்.
Shutter stock
திருத்தணியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பவுன் குமார் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அரையாண்டு தேர்வு முடிவுகளை ஆசிரியர் வெளியிட்டார். அதில், பவுன் குமார் குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் மனமுடைந்ததாக தெரிகிறது.
மாணவர் மரணம்
இந்நிலையில், இன்று காலை பவுன் குமாரை பள்ளிக்குக் கிளம்பச் சொல்லி அவரது பெற்றோர்கள் கூறியுள்ளனர். அப்போது அவர், பள்ளிக்கு செல்ல மறுத்து வீட்டின் படுக்கையறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
பின்னர், நீண்ட நேரம் ஆகியும் பவுன் குமார் கதவை திறக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், மாணவர் கதவை திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பவுன் குமார் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் கிடந்திருக்கிறார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் எனக் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |