நாய் கடித்தால் இந்த இடத்திற்கு போங்க! இபிஎஸ்-க்கு வழி சொன்ன மா.சுப்பிரமணியன்
தமிழகத்தின் எதிர்கட்சித்தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு நாய் கடித்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து போட்டுக் கொள்ளலாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பேசியது
எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் தனிஷ் - ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, அங்கு குழந்தையின் நோய் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறி நாய் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.
ஒருகட்டத்தில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையின் உடலில் அசைவு இருப்பது தெரிய வந்த நிலையில், உடனடியாக குழந்தையை கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து, தற்போது குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக குழந்தையின் தாய் ஷைனி தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரை கிடைக்காத கொடுமை. ஆனால், சுகாதாரத் துறை மந்திரிக்கோ ஓட்டப் பந்தயங்களைத் துவக்கி வைப்பதற்கே நேரம் போதவில்லை. இந்த திமுக அரசின் சுகாதாரத் துறை மந்திரி, மக்கள் நலன் காக்கும் மந்திரியா? அல்லது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் மந்திரியா ? என்பதே சந்தேகமாக உள்ளது.
தமிழகத்தின் தலையெழுத்து, முதலமைச்சரின் மகன் விளையாட்டுத் துறை மந்திரி. சுகாதாரத் துறை மந்திரி மா. சுப்பிரமணியன் விளையாட்டுப் பயிற்சியாளராக வலம் வருவதால், துறையில் கவனம் செலுத்தாத காரணத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் அவதியுறுகிறார்கள்" எனக் கூறியுள்ளார்.
மா.சுப்பிரமணியன் பதில்
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்,"நான் உடற்பயிற்சியாளராக இருப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. காலையில் 4 மணிக்கு எழுந்து 6 மணி வரை உடற்பயிற்சி மேற்கொள்வேன்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் இருப்பவர்கள் எல்லாம் 6 மணி வரை நன்றாக குறட்டை விட்டு தூங்குவார்கள். நான் உடற்பயிற்சி செய்வது அவருக்கு வயிற்றெரிச்சலை தருகிறது.
நாய் கடி சிகிச்சைக்கு மருந்து இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் நாய் கடி மற்றும் பாம்புக்கடி சிகிச்சைக்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது அதற்கான மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கிறது.
அதனால், எடப்பாடி பழனிசாமிக்கு நாய் கடித்தால் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருந்து போட்டுக் கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |