விதிகளை மீறி... நோபல் பரிசின் பதக்கத்தை ட்ரம்பிற்கு பரிசளித்த வெனிசுலாவின் மச்சாடோ
வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது அமைதிக்கான நோபல் பரிசை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் வழங்கியதாக வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனின் வாரிசு
வெள்ளிக்கிழமை மதியம் கேபிடல் ஹில்லில் செய்தியாளர்களிடம் பேசிய மச்சாடோ, வெனிசுலாவை ஒரு ஜனநாயக நாடாக மாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்புக்காக கடந்த ஆண்டு தான் வென்ற நோபல் பரிசை ட்ரம்ப்பிடம் வழங்கியதாகத் தெரிவித்தார்.

அவர் ட்ரம்ப்பை வாஷிங்டனின் வாரிசு என்று குறிப்பிட்டு, அவருக்கு அந்தப் பதக்கத்தை வழங்கியதாகவும், ஜனாதிபதி ட்ரம்ப் வெனிசுலாவின் சுதந்திரத்திற்காக ஒரு தனித்துவமான அர்ப்பணிப்பைச் செய்துள்ளார் என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்காக ட்ரம்ப் வெளிப்படையாகப் பரப்புரை செய்து, பின்னார் மச்சாடோ அதில் வென்றார். மச்சாடோ மற்றும் ட்ரம்பின் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, இதனால் பதக்கத்துடன் ட்ரம்பின் புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை.
நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டதன் பின்னர், ட்ரம்ப்பிற்கு தமது நோபல் பரிசை வழங்குவதற்குத் தான் தயாராக இருப்பதாக மச்சாடோ தெரிவித்தார்.
ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக தம்மை அறிவிக்கலாம் என்பதன் அடிப்படையிலேயே நோபல் பரிசை ட்ரம்பிடம் ஒப்படைக்க அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
விதிகளில் இடமில்லை
ஆனால், ட்ரம்ப் அவருக்கு வாய்ப்பளிக்க மறுத்துவிட்டார். நோபல் பதக்கத்தை ட்ரம்பிடம் ஒப்படைக்கும் முடிவை நோர்வே அமைப்பும் எதிர்த்தது. வெளியிட்ட அறிக்கையில், நோபல் பரிசானது ஒருவருக்கு கைமாறவோ தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொள்ளவோ விதிகளில் இடமில்லை என குறிப்பிட்டிருந்தது.
ஆனால், நோர்வே அமைப்பின் அறிவுறுத்தலை மச்சாடோ புறக்கணித்துள்ளார். ஏற்கனவே மச்சாடோவின் கொள்கைகளும் கோரிக்கைகளும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் அல்ல என்றே விமர்சகர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.

தற்போது விதிகளை மீறி, தமது பதக்கத்தையும் அவர் இன்னொருவருக்கு பரிசளித்துள்ளார். இதனால் எதிர்காலத்தில் ட்ரம்பிற்கான வாய்ப்பு மறுக்கப்படுமா மற்றும் மச்சாடோ மீது நடவடிக்கை இருக்குமா என்பது உள்ளிட்ட கேள்விகள் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனிடையே, ட்ரம்புடனான சந்திப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மச்சாடோ மறுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |