Gen Z போராட்டம் எதிரொலி - நாட்டை விட்டு தப்பி ஓடிய ஜனாதிபதி
மடகாஸ்கரில் Gen-Z போராட்டம் எதிரொலியாக ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினாவை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மடகாஸ்கர் Gen-Z போராட்டம்
மடகாஸ்கரில், கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி தண்ணீர் மற்றும் மின் பற்றாக்குறையை கண்டித்து அரசு எதிராக போராட்டத்தை Gen-Z என அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் முன்னெடுத்தனர்.
சில நாட்களில், தொழிற் சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் போராட்ட குழுவினருடன் இணைந்து, பாரிய போராட்டமாக உருவெடுத்தது.
போராட்ட குழுவினர் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா( Andry Rajoelina) பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் திடீர் திருப்பமாக ராணுவத்தின் ஒரு பிரிவான CAPSAT பிரிவு போராட்டக்காரர்களுக்கு இணைந்து, போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது.
மேலும், இந்த பிரிவு ராணுவத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்து, புதிய ராணுவ தளபதியை நியமித்துள்ளது.
2009 ஆம் ஆண்டில் இந்த பிரிவே ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினாவை ஆட்சியில் அமர்த்த உதவியது.
அரசியலமைப்புக்கு முரணாக, சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதுக்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு என ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா அறிவித்திருந்தார்.
தப்பி ஓடிய ஜனாதிபதி
இந்நிலையில், ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்திய மடகாஸ்கர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிடெனி ராண்ட்ரியானசோலோனியாகோ(Siteny Randrianasoloniaiko), "நாங்கள் ஜனாதிபதி அலுவலக ஊழியர்களிடம் பேசினோம். அவர் வெளியேறியதை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்" என தெரிவித்தார்.
பேஸ்புக் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா, தனது பாதுகாப்பிற்காக வேறொரு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் எங்கே உள்ளார் என்ற தகவலை வெளியிடவில்லை. மேலும், மடகாஸ்கரை ஒரு போதும் அழிய விடமாட்டேன் என தெரிவித்தார்.
செயின்ட் மேரி விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் இராணுவத்தின் CASA விமானத்தின் மூலம் அவர் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
காசா போர் நிறுத்த உச்சிமாநாட்டிற்கு பின்னர் எகிப்திலிருந்து பேசிய மக்ரோன், ரஜோலினாவின் வெளியேற்றத்தில் பிரான்ஸின் பங்கை உறுதிப்படுத்த முடியாது, மடகாஸ்கரில் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
ஜீன் ஆண்ட்ரே நிட்ரேமஞ்சரி(Jean Andre Ndremanjary )இடைக்கால செனட் தலைவராக நியமிக்கப்பட்டார். மடகாஸ்கர் அரசியலமைப்புப்படி ஜனாதிபதி பதவி காலியாகிவிட்டால், புதிய தேர்தல் நடைபெறும் வரை செனட்டின் தலைவர் தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |