பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் மரணம்! திரையுலகினர் கண்ணீருடன் இரங்கல்
70 வயதான இந்திரா தேவி உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார்
அவரது இறுதி ஊர்வலம் நாளை மறுநாள் நடைபெறும் என்று கூறப்படுகிறது
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மகேஷ் பாபு. இவரது தந்தை கிருஷ்ணா முன்னணி நடிகராக இருந்து 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயாருமான இந்திரா தேவி (70) உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஐதராபாத்தில் இன்று காலை இயற்கை எய்தினார்.
அவரது உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், இறுதி ஊர்வலம் நாளை மறுநாள் மகா பிரஸ்தானத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மகேஷ் பாபுவின் சகோதரியும், தயாரிப்பாளருமான மஞ்சுளா கட்டமனேனி வெளியிட்ட பதிவில், 'அன்புள்ள அம்மா, நீங்கள் என் முதல் குரு. என் அடித்தளம் மற்றும் என் இதயம். உங்கள் அன்பு எனக்கு பாதுகாப்பு. என் வாழ்க்கையில் நீங்கள் மிகப்பெரிய செல்வாக்கு. என் அம்மா தனது வாழ்நாள் முழுவதும் கொடுப்பது, கொடுப்பது, கொடுப்பது மட்டுமே தெரியும்.
தனக்காக எதையும் கேட்காதவர். எங்கள் குழந்தைப் பருவத்தில் ஒரு நாள் கூட அவள் இருப்பைத் தவறவிட்டதில்லை. அவள் வழக்கமான தன்னலமற்ற, அன்பான வழியில் எங்கள் எல்லா தேவைகளையும் கவனித்துக்கொண்டாள்' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய முன்னணி நடிகர்கள் மகேஷ் பாபுவின் தாயார் மறைவுக்கு இரங்கல் பதிவு வெளியிட்டு வருகின்றனர்.