இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவை ரத்து செய்துள்ள மலேசியா
malaysia end visa free entry for indians from 2027: இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 30 நாள் விசா இல்லா நுழைவை மலேசியா வழங்கி வந்தது.
தற்போது அந்த விசா இல்லா நுழைவு டிசம்பர் 31 2026 வரை மட்டுமே அமுலில் இருக்கும் எனவும், 1 ஜனவரி 2027 முதல் மலேசியா செல்பவர்கள் விசா பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவு ரத்து
வேலை தேடி மலேசியாவிற்குப் பயணம் செய்ய, 30 நாள் விசா இல்லா நுழைவு வசதியைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக மலேசியாவில் உள்ள இந்திய உயர் ஆணையம் இந்தியக் குடிமக்களை எச்சரித்த 2 மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

30 நாள் விசா இல்லா நுழைவு சுற்றுலா மற்றும் சமூக சந்திப்பிற்கு மட்டுமே எனவும், அதனை வேலை தேட பயன்படுத்தக்கூடாது எனவும் இந்திய உயர் ஆணையம் எச்சரித்திருந்தது.
மலேசியாவில் வேலைவாய்ப்புகள் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் சில முகவர்களை நம்பி, தேவையான பணி அனுமதி இல்லாமல் வரும் இந்தியர்கள், விசா காலம் முடிந்தும் தங்குவதற்கோ அல்லது சட்டவிரோதக் குடியேற்ற அந்தஸ்தைப் பெறுவதற்கோ வாய்ப்புள்ளது.
இந்த விசா இல்லா நுழைவு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 1 ஜனவரி 2027 முதல் மலேசியா வர விரும்பும் இந்திய சுற்றுலா பயணிகள், டிசம்பர் 1 ஆம் திகதி முதல் விசா பெற முறையாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்திய சுற்றுலா பயணிகள் மலேசியா செல்லும் முன்னர், செல்லுபடியாகும் மற்றும் சரிபார்க்கக்கூடிய இருவழி விமானப் பயணச்சீட்டு, உறுதிசெய்யப்பட்ட ஹொட்டல் முன்பதிவு, வருகைக்கு 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய மலேசிய டிஜிட்டல் வருகை அட்டை (MDAC) சமர்ப்பித்ததற்கான சான்று, குறைந்தது 6 மாத கால செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவை வைத்திருக்க வேண்டும்.
மலேசியாவிற்கு, 2025 ஆம் ஆண்டில் 15.6 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளும், 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 7.38 லட்சம் சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
சமீபத்தில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23வது ASEAN - INDIA உச்சி மாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிம், மலேசியா உள்ளிட்ட ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இலவச மின்னணு விசா (e-Visa) வழங்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.