திருமணம் செய்த சிறுமிகளுடன் அமெரிக்காவுக்கு தப்பிய ஆப்கன் ஆண்கள்: எழுந்த புதிய சிக்கல்
காபூலில் இருந்து தாலிபான்களுக்கு பயந்து தப்பிய ஆண்களில் பலர், தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறும் சிறுமிகளுடன் அமெரிக்காவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ள அமெரிக்க அதிகாரிகள், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் விஸ்கான்சினில் இதுபோன்ற சம்பவங்களை அடையாளம் கண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மிகவும் வயதான ஆண்களின் 'மனைவிகளாக' ஆப்கன் சிறுமிகள் அதிகாரிகளிடம் குறிப்பிடப்பட்டது ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டது.
சிறார் திருமணங்கள் ஆப்கானிஸ்தானில் வழக்கமான ஒன்றாக இருப்பினும், அமெரிக்காவில் அது சட்ட சிக்கலை ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. மேலும், விஸ்கான்சின் பகுதியில் கொண்டுவரப்பட்ட ஆப்கன் அகதிகளில் சிறார் திருமணம் தொடர்பான வழக்குகள் கண்டறியப்பட்டால், உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட வயதான ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அவற்றில் பல சம்பவங்கள் நிரூபிக்க கடினமாக உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.