நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம்.., பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு
குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேட்டால் பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் முறைகேடு
கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், குஜராத் மாநிலம், பஞ்ச்மஹால் மாவட்டம், கோத்ராவில் ஒரு பள்ளியில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மையத்தில் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தேர்வு மையத்தில் துணை கண்காணிப்பாளராக இருந்த துஷார் பட் என்ற இயற்பியல் ஆசிரியர் மற்றும் பர்சுராம் ராய், ஆரிப் வோரா ஆகிய மூன்று பேர் சிக்கினர்.
பின்னர், ஆசிரியர் துஷார் பட் காரில் நடத்திய சோதனையில் ரூ.7 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணமானது நீட் தேர்வு எழுத வந்த மாணவர், துஷார் பட்டுக்கு முன் பணமாக வழங்கியது என்பது தெரியவந்தது.
இதன்பின்னர், மாவட்ட கூடுதல் ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட குழுவினர் தேர்வு நாளன்று பள்ளிக்கு வந்து துஷார் பத்திடம் விசாரணை நடத்தினர்.
அவரது செல்போனிற்கு 16 பேரின் பெயர்கள், தேர்வு மையங்கள் அடங்கிய பட்டியலை வாட்ஸ்அப் எண்ணுக்கு பரசுராம் ராய் அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக துஷார் பட், பர்சுராம் ராய், ஆரிப் வோரா ஆகிய 3 பேர் மீதும் பொலிஸார் குற்றவியல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |