என் மச்சானை கொலை செய்துவிட்டேன்! போலீசாரிடம் இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்
இந்தியாவில் வேறு மதத்தை சேர்ந்த நபரை தன்னுடைய தங்கை காதல் திருமணம் செய்ததால் அவர்களது அண்ணன் கௌரவ கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம்
தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம், பில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது30).
கனா போர் பகுதியை சேர்ந்தவர் செய்யது அஸ்ரி சுல்தான், இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது நண்பர்களாக பழகி பின்னர் காதலிக்க தொடங்கினர்.
கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இதுபற்றி அஸ்ரி சுல்தானின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
நாகராஜ் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால், அஸ்ரி சுல்தானின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஒருகட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் வீட்டைவிட்டு வெளியேறிய அஸ்ரி சுல்தான், நாகராஜை கரம்பிடித்தார்.
அவரது பெயரையும் பல்லவி என மாற்றிக்கொண்டார்.
கடப்பாறையால் குத்திக்கொலை
தான் பார்த்த வேலையையும் விட்டுவிட்டு, மனைவியுடன் விசாகப்பட்டிணத்தில் குடியேறினார் நாகராஜ்.
பல மாதங்கள் கழிந்ததும் மீண்டும் மனைவியை அழைத்துக்கொண்டு ஹைதராபாத் வந்துள்ளார்.
சரூர் நகர், பஞ்சாப் அணில்குமார் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகராஜ் வேலைக்கு சென்றுவிட்டு கார்ப்பரேஷன் ரோடு வழியாக வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது நாகராஜை பின்தொடர்ந்து வந்த அஸ்ரி சுல்தான் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் பைக்கில் சென்ற நாகராஜ் மீது கடப்பாரையால் தாக்கினர். இதில் தலையில் படுகாயம் அடைந்த நாகராஜ் பைக்கிலிருந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து நாகராஜை கடப்பாறையால் சரமாரியாக குத்தியதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த ஹைதராபாத் போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அஸ்ரி சுல்தான் சகோதரரை கைது செய்தனர்.
பின்னர் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், எங்கள் எதிர்ப்பையும் மீறி மாற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததால் நாகராஜனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.