தமிழ்நாட்டில் ஒரு மினி தாஜ்மஹால்! தாய்க்கு நினைவிடம் கட்டி நெகிழவைத்த தமிழன்
தாயின் நினைவாக ரூ.5 கோடி செலவில் தாஜ் மஹால் வடிவில் நினைவிடம் கட்டி தனது தாய்ப்பாசத்தை வெளிப்படுத்திய நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் திருவாரூர் அருகே தனது தாயாரின் நினைவாக மினி தாஜ்மஹால் நினைவு இல்லத்தை மகன் அம்ருதீன் ஷேக் (Amrudeen Sheik Dawood Sahib) கட்டி அசத்தியுள்ளார்.
தன்னை பெற்று வளர்த்த தாய்க்கு கடனை அடைக்க வேண்டும் என்று நினைத்த அம்ருதீனுக்கு, உலகிலேயே அன்பின் சின்னமாக கட்டப்பட்ட தாஜ்மஹால் நினைவுக்கு வந்தது. அதே வடிவில் அம்மாவுக்கு ஒரு நினைவு இல்லத்தை காட்டியுள்ளார்.
நாங்கள் எங்கள் தாயை மிகவும் நேசிக்கிறோம். எங்களுக்கு அவர் தான் எல்லாமே. அவர் மறைந்தாலும் இன்னும் எங்கள் இதயத்தில் இருக்கிறார் என்று அம்ருதீன் கூறுகிறார். அம்ருதீனுக்கு 11 வயது இருக்கும்போதே அவரது தந்தை அப்துல் காதர் இறந்துவிட்டார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு, அனைத்து பொறுப்புகளையும் அவரது தாய் ஜெய்லானி பீவி ஏற்றுக்கொண்டார்.
அவர் தனது மகன் அம்ருதீனுடன் சேர்ந்து, நான்கு பெண் குழந்தைகளை வளர்த்து, குடும்பத்தை நடத்துவதற்காக கணவர் நடத்திய ஹார்டுவேர் தொழிலைத் தொடர்ந்தார்.
“சென்னையில் ஹார்டுவேர் வியாபாரியான எனது தந்தையை இழந்தபோது நானும் எனது நான்கு சகோதரிகளும் மிகவும் இளமையாக இருந்தோம். என் அம்மா ஜெய்லானி பீவிக்கு 36 வயது. இவ்வளவு சின்ன வயசுலேயே, அம்மா எங்கள் ஐந்து பேரையும் வளர்த்தார்.
அவர் டிசம்பர் 2020-ல் தனது 68 வயதில் இறந்தார். அவரது மரணம் எங்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் அவருடைய இருப்பு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே எனது குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் அம்மையப்பனில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் அவருக்கு இந்த சமாதி கட்ட முடிவு செய்தேன்” என்று அம்ருதீன் ஷேக் தாவூத் கூறினார்.
அம்ருதின் தனது தாயின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மிக அழகான நினைவுச்சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் வடிவத்தில் ஒரு நினைவு இல்லத்தை கட்ட முடிவு செய்தார்.
இதற்காக அவர் தனது பூர்வீக கிராமமான அம்மையப்பனில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கினார். அங்கு இந்த நினைவிடம் கட்ட ரூ. 5 கோடி செலவானது.
வெள்ளை பளிங்கு கற்களை ராஜஸ்தானிலிருந்து இறக்குமதி செய்து தாஜ் மஹாலைப் போலவே காட்டினார். அதை முடிக்க இரண்டு வருடங்கள் ஆனது. இது ஜூன் 2, 2023 அன்று பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.