இலங்கை முதல் இந்தோனேசியா வரை கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியில் மாயமான நபர்: 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ள அற்புதம்
இந்தோனேசியாவை 2004ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது காணாமல் போனவர்களில் Abrip Asepம் ஒருவர். 16 ஆண்டுகளாக அவர் இறந்துபோய்விட்டார் என்றே அவரது குடும்பத்தார் நம்பிக்கொண்டிருந்தநிலையில், மன நல மருத்துவமனை ஒன்றில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், அவரது குடும்பத்தாரை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்துள்ளது.
பொலிசாராக பணியாற்றிய Abrip, சுனாமியின்போது தான் கண்ட கோர காட்சிகளால் மன நலம் பாதிக்கப்பட்டு, மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார்.
ஆனால், அவர் அங்கிருப்பதை அந்த மருத்துவமனை அலுவலர்கள் ஏன் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தவில்லை என்பது தெரியவில்லை. எப்படி அவரை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தார்கள் என்ற விவரமும் கிடைக்கவில்லை.
எப்படியோ, இறந்துபோனார் என 16 ஆண்டுகளாக எண்ணிக்கொண்டிருந்த Abrip கிடைத்ததில் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி, கடலுக்கடியில் ரிக்டர் அளவில் 9 முதல் 9.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று உருவாக்கிய சுனாமி, இந்தோனேசியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிச்சென்றது.
அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவில் குறைந்தது 167,000 பேர் வரை உயிரிழந்தார்கள்.
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை சரி வர தெரியாததால், உண்மையில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


