ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட்ட நபர்... சிறைத்தண்டனை விதித்த ஆசிய நாடொன்று
ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட்டதற்காக கஜகஸ்தான் நீதிமன்றம் ஒரு நபருக்கு நான்கு ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதித்தது.
போர் முயற்சியில் சேர வேண்டாம்
ரஷ்யாவின் வாக்னர் படைகளுடன் இணைந்தே அந்த நபர் உக்ரைனில் போரிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மத்திய ஆசியாவில் அதன் நட்பு நாடுகளையும் உலுக்கியுள்ளது.
முன்னாள் சோவியத் நாடுகள் தங்கள் குடிமக்களை போர் முயற்சியில் சேர வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளன. இந்த நிலையில், கஜகஸ்தானின் மத்திய உலிடாவ் பகுதியில் சப்தாயேவ் நகரில் உள்ள ஒரு நீதிமன்றம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் நடந்த போரில் திட்டமிட்டு சட்டவிரோதமாக பங்கேற்றதற்காக ஒரு வருக்கு 4.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ரஷ்யாவுக்காகப் போராடியதற்காக பல மத்திய ஆசிய நாட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி உக்ரைனுக்கு எதிரான போர் நீடித்து வருவதால், ரஷ்யா தற்போது புலம்பெயர் மக்களை ஆட்சேர்ப்பு செய்ய முயன்றுள்ளது.
கடுமையான குற்றம்
இதனிடையே, அந்த நபர் தொடர்பில் பின்னணி எதையும் தெரிவிக்காத நீதிமன்றம், 2022 இலையுதிர்காலத்தில் வாக்னர் குழுவில் சேர அவர் சித்தாந்த ரீதியாகத் தூண்டப்பட்டார் என தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நபர் நாட்டின் அமைதிக்கும் மனிதகுலத்தின் பாதுகாப்பிற்கும் எதிரான ஒரு கடுமையான குற்றத்தைச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக போரிட அந்த நபருக்கு சுமார் 3,800 யூரோ ஊதியமாகவும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் வாக்னர் கூலிப்படை கலைக்கப்பட்ட நிலையில், அந்த நபர் 2023 ஜூலை மாதம் நாடு திரும்பியுள்ளார். வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் 2023ல் ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நிலையில், அந்தக் குழு கலைக்கப்பட்டது.
இதன் பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு விமான விபத்தில் யெவ்ஜெனி பிரிகோஜின் கொல்லப்பட்டார். ரஷ்ய ஆதரவு நாடான கஜகஸ்தான் உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை என்பதுடன்,
கிரிமியா தொடங்கி உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யா சொந்தம் கொண்டாடுவதையும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |