பற்றியெரியும் இந்திய மாநிலம்... 100 கடந்த பலி எண்ணிக்கை: மத்திய அமைச்சரின் குடியிருப்பு தீக்கிரை
இந்திய மாநிலம் மணிப்பூரில் கலவரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங் குடியிருப்பு வன்முறை குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது திட்டமிட்ட இன அழிப்பு
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 40 நாட்களாக நீடித்துவரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 100 பேர்கள் வரையில் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது திட்டமிட்ட இன அழிப்பு என்றே சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
@PTI
ஆனால் இந்த சம்பவங்களில் இதுவரை முறையான எந்த நடவடிக்கையும் இந்திய அரசால் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களில் ஒருமுறை கூட பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை என்பதுடன், உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்டவில்லை.
மட்டுமின்றி, மணிப்பூரில் ஆளும் பாஜக அரசால் இந்த மோதல்களை கட்டுக்குள் கொண்டுவரவும் முடியவில்லை. தற்போது 10,000க்கும் அதிகமான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர், 500க்கும் அதிகமான பி.எஸ்.எப்.வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பாதுகாப்பு படையினரிடம் இருந்து ஆயுதங்களை கொள்ளையடித்து வன்முறைகளில் ஈடுபடுவதால் நிலைமை மிக மிக மோசமடைந்துள்ளது. மைத்தேயி, குக்கி ஆகிய இரு இனக்குழுக்களும் ஆயுதங்கள் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அமைச்சர் வீடு தீக்கிரை
இந்த மோதலில் ஏராளமானோர் மரணமடைந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த வாரம் மணிப்பூர் பெண் அமைச்சர் Nemcha Kipgen என்பவரது வீடு வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
@ANI
மைத்தேயி இனக்குழுவினரே இந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் குக்கி இனக் குழுவினரது வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தலைநகர் இம்பாலில் மத்திய அமைச்சர் ஆர்.கே ரஞ்சன் சிங் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 100 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ள தகவல் வெளியாகியும், 40 நாட்களாக வன்முறை சம்பவங்கள் நீடித்துவரும் நிலையில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கேள்வி.
மேலும் மணிப்பூர் மாநிலத்தில் நிலைமையை ஆராய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை அம்மாநிலத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |