மன்மோகன் சிங் மறைவு.., இரங்கல் தெரிவித்து வரும் சர்வதேச தலைவர்கள்
நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92வது வயதில் 26 டிசம்பர் 2024 அன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
மன்மோகன் சிங்கின் பங்களிப்பு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகிறது.
இந்தியாவின் நீண்ட காலம் பணியாற்றிய பிரதம மந்திரிகளில் ஒருவராக இருந்தார்.
மேலும் இவர் 2004-2014 முதல் பிரதமராகவும் அதற்கு முன் நிதி அமைச்சராகவும் முக்கிய தாராளமயமாக்கல் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியாக கருதப்பட்டார்.
இந்நிலையில் இவரது மறைவிற்கு பல உள்நாட்டு தலைவர்களும் சர்வதேச தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் வருகிற 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தலைவர்களின் இரங்கல்
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, இந்திய மக்களிடம், அமெரிக்கா தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்ஸாய், இன்ஸ்டாகிராம் வாயிலாக தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். தன்னுடைய மிகவும் நம்பிக்கைக்குரிய மகனை இந்தியா இழந்துவிட்டதாக, அவர் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், தங்கள் நாட்டின் சிறந்த நண்பர் என, மன்மோகன் சிங்கை குறிப்பிட்டுள்ளார். "அவருடன் இணைந்து பணியாற்றுவதை நான் மிகவும் விரும்பியுள்ளேன். அவர் தந்தையை போன்றவர்." என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"டாக்டர் மன்மோகன் சிங் குறித்து பேசுவது எனக்கு உணர்ச்சிபூர்வமான தருணமாக இருக்கிறது. அவரது வாழ்க்கையும் செய்த பணிகளும், 1991-2014 வரையிலான காலகட்டமும் இந்திய வரலாற்றில் ஓர் பொற்காலம். பல ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாக பணியாற்றியிருக்கிறேன். இவ்வளவு அடக்கமான ஒரு மனிதரை நான் கண்டதில்லை. மன்மோகன் சிங் நிதியமைச்சராக ஆன பின், இந்தியாவின் ஒட்டுமொத்த கதையும் மாறிவிட்டது." என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று விசேட செய்தியொன்றின் ஊடாக தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
"இலங்கை மக்கள் சார்பாகவும், என் சார்பாகவும், இந்திய குடியரசு, டாக்டர். மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது எண்ணற்ற அபிமானிகளுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் 'X' இல் பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |