பெருவெள்ளத்தில் சிக்கி 20,000 மக்கள் இறப்பு? லிபியா தொடர்பில் வெளிவரும் பகீர் தகவல்
கிழக்கு லிபியாவில் பெருவெள்ளத்தில் சிக்கி 20,000 பேர்கள் வரையில் இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக அப்பகுதி நகர மேயர் ஒருவர் தெரிவித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுனாமி பேரலை போன்று
கிழக்கு லிபியாவில் புயல் மற்றும் கன மழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம், இரண்டு அணைகள் உடையும் நிலைக்கு தள்ளியது. இதனால் சுனாமி பேரலை போன்று வெள்ளம் டேர்னா நகரத்தை மொத்தமாக மூழ்கடித்தது.
@epa
வெள்ளப்பெருக்கின் வேகம், மக்களையும் சேர்த்து குடியிருப்புகளை கடலுக்குள் தள்ளியது. இதனால் சுமார் 10,000 பேர்கள் வரையில் மாயமாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
ஆனால் தற்போது டேர்னா நகர மேயர் தெரிவிக்கையில், அணைகள் இரண்டு உடைந்ததை அடுத்து ஏற்பட்ட சுனாமி போன்ற வெள்ளப்பெருக்கில் சிக்கி, 18,000 முதல் 20,000 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
@reuters
பெருவெள்ளத்தில் சேதமடைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களை கணக்கில் கொண்டு இந்த எண்ணிக்கையை தாம் வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
400 மில்லி மீற்றர் அளவுக்கு மழை
மேலும், மீட்கப்படாத உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் அல்லது கடலில் காணப்படுவதால் நோய் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 100,000 மக்கல் குடியிருந்து வந்த பகுதியாகும் டேர்னா.
துறைமுக நகரமான டேர்னா தற்போது மொத்தமாக சிதைந்து காணப்படுகிறது. பொதுவாக செப்டம்பர் மாதம் மொத்தமாகவே 1.5 மில்லி மீற்றர் மழைப் பொழிவு மட்டுமே பதிவாகும் லிபியாவில், 24 மணி நேரத்திற்கும் குறைவான கால அளவில் சில பகுதிகளில் 400 மில்லி மீற்றர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
@reuters
இதுவே இரு அணைகளில் நீர் மட்டம் உயர காரணமானதுடன், உடைந்து போகும் மட்டும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெள்ளப்பெருக்கு மொத்த நகரையும் மூழ்கடித்துள்ளது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |