கொத்தாக புதைக்கப்பட்ட மக்கள்... அம்பலமாகும் ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனம்
உக்ரைனின் புச்சா நகரில் மொத்தமாக புதைக்கப்பட்டிருந்த 400 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் முன்னெடுத்துள்ள காட்டுமிராண்டித்தனம் நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது. ரஷ்ய துருப்புகள் உக்ரைன் குடிமக்கள் மீது மனிதாபிமானமற்ற கொடுமைகளை முன்னெடுத்துள்ளதாக உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையிலேயே, புச்சா நகரில் தொழிலாளர்கள் சிலர் சேற்றில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்த அப்பாவி பொதுமக்களின் உடல்களை மீட்டுள்ளனர். உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் திட்டமிட்டே அப்பாவி மக்கள் மீது சித்தரவதை, வன்கொடுமை, படுகொலை என நடத்தியதாக ஐரோப்பிய அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், உக்ரைன் மீது படையெடுப்பு நடந்த பிப்ரவரி 24ம் திகதிக்கு பின்னர் 14 வயது சிறுமி உட்பட குறைந்தது 25 பெண்கள் வன்கொடுமைக்கு இரையாக்கபப்ட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு வெளிப்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாடு தற்போது குற்றம் நடந்த பகுதியாகவே காட்சியளிப்பதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைவர் கரீம் கான் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் அட்டூழியங்களை இன அழிப்பு என முதன்முறையாக குறிப்பிட்டுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.
ஆனால், புச்சா நகரில் நடந்ததாக கூறப்படும் அனைத்தும் திட்டமிட்ட நாடகம் எனவும், மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து உக்ரைன் போடும் வேஷம் எனவும் ரஷ்யா சாடியுள்ளது.
தலைநகர் கீவ்வின் புறநகர்ப் பகுதிகளில் 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும், ரஷ்ய துருப்புக்கள் பின்வாங்கிய பிறகும் குறைந்தது 200 பேரைக் காணவில்லை என்றும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கலாம் எனவும், அதிகாரிகள் தரப்பு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.