சிறைக் கலவரத்தில் முடிந்த கும்பல் வன்முறை... படுகொலை செய்யப்பட்ட 68 பேர்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சிறைச்சாலை ஒன்றில் நடந்த பெரும் கலவரத்தில் இதுவரை 68 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், இந்த கொடூரமான வன்முறை சம்பவம் கும்பல்களுக்கு இடையே ஏற்படும் போட்டியால் தூண்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Guayaquil நகருக்கு அருகே அமைந்துள்ள லிட்டோரல் சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு கலவரம் வெடித்துள்ளது. குறித்த சிறைச்சாலையில் பெரும்பாலும் Los Choneros என்ற கும்பலை சேர்ந்தவர்களே கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 700 கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென்று கலவரம் வெடித்துள்ளது. தொடர்ந்து காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன. கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் சிறை வளாகம் கலவர பூமியாக மாறியது.
இந்த கலவரத்தில் 68 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த வன்முறையைத் தொடர்ந்து பொலிசார் சனிக்கிழமை பகலில் மட்டுமே சிறைக்குள் நுழைய முடிந்ததாக கூறப்படுகிறது.
கலவரத்தின் போது கைதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நிலைமையை மேலும் இறுகச்செய்யும் என்றே பொலிஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஈகுவடாரில் ஒரே நாளில் 3 சிறைகளில் நடந்த மிகப்பெரிய கலவரத்தில் 79 கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.