இரத்தச்சகதியான 3 கிராமங்கள்... கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: ஐ.எஸ் மீது சந்தேகம்
நைஜரின் அண்டை நாடான மாலியின் எல்லைப் பகுதியினை ஒட்டியுள்ள தஹுவா மாகாணத்தில் ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட கொடூரத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 137 என அதிகரித்துள்ளது.
ஆபிரிக்க நாடான நைஜர் மற்றும் அதன் அண்டை நாடான ஸஹேல் ஆகியவற்றில் பல்வேறு ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அவர்களில் சிலர் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், வேறு சிலர் அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வப்போது இந்த குழுக்கள் திடீரென்று கிராமங்களில் புகுந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
நைஜரின் அண்டை நாடான மாலியில் எல்லைப் பகுதியினை ஒட்டியுள்ள தஹுவா மாகாணத்தில் ஞாயிறன்று 3 கிராமங்களை சுற்றி வளைத்த போராளிக் குழுக்கள் துப்பாக்கிகளால் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் முதலில் 60 பேர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்பட்டது. இந்த நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 137 என அதிகரித்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு படைவீரர்கள் அனுப்பப்பட்டு அவர்கள் போராளிகளுடன் போரிட்டு வருகின்றனர் என்று மாகாண செய்தித்தொடர்பாளர் அப்துல் ரமான் சகாரியா உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது வரை யாரும் அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது, ஆனால் ஐ.எஸ் ஆதரவு குழுக்கள் மீது சந்தேகம் இருப்பதாக நைஜர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசின் கண்காணிப்பு குறைவாக உள்ள இத்தகைய பகுதிகளில் இதுபோல தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 300 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம், தென்மேற்கில் மாலி எல்லைக்கு அருகே அமைந்துள்ள தில்லாபெரி பிராந்தியத்தில் துப்பாக்கிதாரிகள் பேருந்தை குறிவைத்து தாக்கியதில் சந்தையில் இருந்து திரும்பிய குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.