நாட்டை உலுக்கிய கோர விபத்து... 100-ஐ கடந்த பலி எண்ணிக்கை: வெளியான அண்மை செய்தி
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 120 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம்
காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகமென்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
@reuters
ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர். இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில், தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரெயிலும் விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். சமீபத்திய தகவலின் அடிப்படையில் இதுவரை 120 பேர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் 800 பேர்கள் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மீட்பு பணியில் தொய்வு
மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் கோபால்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் தகவல் கூறியுள்ளார்.
@reuters
சுமார் 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள பேருந்துகளிலும் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு வருகின்றனர்.
வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.