வாணவேடிக்கை காட்டிய மேக்ஸ்வெல்! தூளாக நொறுங்கிய மேற்கிந்திய தீவுகள்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரூதர்போர்டு, ஷெப்பர்ட் மிரட்டல்
வார்னர் பார்க் மைதானத்தில் நடந்த 4வது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 9 விக்கெட்டுகளுக்கு 205 ஓட்டங்கள் குவித்தது.
ரூதர்போர்டு 15 பந்துகளில் 31 ஓட்டங்களும், ஷெப்பர்ட் 18 பந்துகளில் 28 ஓட்டங்களும், ரோவ்மன் பௌல் 22 பந்துகளில் 28 ஓட்டங்களும் விளாசினர். ஆடம் ஜம்பா 3 விக்கெட்டுகளும், ஹார்டி, பார்லெட் மற்றும் அப்போட் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் மிட்சேல் மார்ஷ் டக்அவுட் ஆனார். அடுத்து ஜோஷ் இங்லிஷ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் கூட்டணி அமைத்தனர்.
இங்லிஷ், மேக்ஸ்வெல் ருத்ர தாண்டவம்
அரைசதம் அடித்த ஜோஷ் இங்லிஷ் (Josh Inglis) 30 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் குவித்தார்.
சிக்ஸர் மழை பொழிந்த க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) 18 பந்துகளில் 47 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர், 1 பவுண்டரி அடங்கும்.
பின்னர் வந்த ஓவன் (2), கோணலி (0) வந்த வேகத்தில் வெளியேற, ஹார்டி 23 (16) ஓட்டங்கள் எடுத்தார்.
எனினும், கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியில் மிரட்டிய கேமரூன் கிரீன் (Cameron Green) 55 (35) ஓட்டங்கள் விளாச, அவுஸ்திரேலியா 19.2 ஓவரில் 206 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ப்ளாட்ஸ் 3 விக்கெட்டுகளும், ஹோல்டர், ஷெப்பர்ட் மற்றும் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |