திடீர் பரபரப்பை உருவாக்கிய ட்ரம்பின் மனைவி: ட்ரம்பின் பதில்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலானியா ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை உருவாக்கினார்.
இந்நிலையில், தன் மனைவி இப்படி திடீரென ஒரு அறிவிப்பை வெளியிடப்போவது குறித்து முன்பே தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் ட்ரம்ப்!
திடீர் பரபரப்பை உருவாக்கிய மெலானியா
ஏராளம் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் வாழ்வை சீரழித்தவர் அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
இந்த எப்ஸ்டீன்தான் மெலானியாவை ட்ரம்புக்கு அறிமுகம் செய்ததாகவும், அதற்குப் பிறகுதான் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் பலமுறை செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க நீதித்துறை, எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் பெயரில், எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டுவரும் நிலையில், அவற்றில், இளவரசர் ஆண்ட்ரூ, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் க்ளிண்டன், ட்ரம்ப் மற்றும் ட்ரம்பின் மனைவியான மெலானியா ட்ரம்ப் உட்பட ஏராளமானோரின் பெயர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
மெலானியா ட்ரம்ப், எப்ஸ்டீனுடைய காதலியான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் என்னும் பெண்ணுக்கு அனுப்பிய மின்னஞ்சலும் அதற்கு மேக்ஸ்வெல் அளித்த பதிலும் எப்ஸ்டீன் கோப்புகளில் அடங்கும்.
ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியானபின், அவருக்கும் எப்ஸ்டீனுக்கும் உள்ள தொடர்பு அவருக்கு அரசியலில் பெரும் தொல்லையாக இருந்துவருகிறது.
இந்நிலையில், நேற்று திடீரென ஊடகவியலாளர்களை சந்தித்த ட்ரம்பின் மனைவியாகிய மெலானியா, அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், மோசமான நபரான எப்ஸ்டீனுடன் என்னை தொடர்பு படுத்தி பேசும் பொய்களுக்கு இன்றுடன் முடிவு வரவேண்டும் என்று கூறியுள்ளார் மெலானியா.

எனக்கு எப்போதுமே எப்ஸ்டீனுடன் நட்பு இருந்ததில்லை, நானும் ட்ரம்பும் அழைக்கப்பட்டிருந்த பார்ட்டிகளுக்கு எப்ஸ்டீனும் அழைக்கப்பட்டிருந்தார்.
அத்துடன், எப்ஸ்டீனின் காதலியான மேக்ஸ்வெல்லுடனான மின்னஞ்சல் தொடர்பு சாதாரணமான ஒன்று என்றும் கூறியுள்ளார் மெலானியா.
மேலும், 2000ஆம் ஆண்டில், தான் ட்ரம்புடன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில்தான் முதன்முறையாக எப்ஸ்டீனை சந்தித்ததாகவும், அப்போது அவரது குற்றப்பின்னணி குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறிய மெலானியா, தான் எப்ஸ்டீன் மூலமாகத்தான் ட்ரம்பை சந்தித்ததாக கூறப்படுவதையும் மறுத்துள்ளார்.
இந்நிலையில், தன் மனைவி இப்படி திடீரென ஒரு அறிவிப்பை வெளியிடப்போவது குறித்து முன்பே தனக்குத் தெரியாது என்று கூறியுள்ள ட்ரம்ப், அது தொடர்பில் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவரிடம், மெலானியாவுக்கு எப்ஸ்டீனைத் தெரியாது என்று கூறி, பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |