ரஷ்யா வேண்டுமென்றேதான் வம்புக்கு இழுக்கிறது: ஜேர்மன் சேன்ஸலர்
ரஷ்யா, நேட்டோ நாடுகளை வம்புக்கு இழுப்பதற்காகவே, வேண்டுமென்றே போலந்துக்குள் ட்ரோன்களை அனுப்பியதாக ஜேர்மன் சேன்ஸலர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜேர்மன் சேன்ஸலரின் கருத்து
சுமார் 19 ரஷ்ய ட்ரோன்கள் போலந்துக்குள் ஊடுருவிய விடயம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய அரசாங்கத்தின் முற்றிலும் பொறுப்பற்ற இந்த நடவடிக்கை, பால்டிக் பிராந்தியத்திலும் நேட்டோவின் கிழக்குப் பகுதியிலும் பல மாதங்களாக நாம் பார்த்து வரும் நீண்ட ஆத்திரமூட்டல்களின் ஒரு பகுதியாகும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.
இது ஐரோப்பாவின் அமைதிக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும் என்று கூறிய அவர், ஐரோப்பாவின் வான் பாதுகாப்பு மேம்படுத்தப்படவேண்டும் என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் போலந்தில் எந்த இலக்கையும் குறிவைக்கவில்லை என்று கூறிய அதே நேரத்தில், ரஷ்ய ட்ரோன்கள் எல்லை தாண்டி போலந்துக்குள் நுழைந்ததையும் மறுக்கவில்லை.
அதேபோல, ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் நாட்டின் துணை பாதுகாப்பு அமைச்சரும், ட்ரோன்கள் தவறுதலாக போலந்துக்குள் நுழைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான போரிஸ் பிஸ்டோரியஸ், போலந்துக்குள் நுழைந்த 19 ட்ரோன்களும் பெலாரஸ் நாட்டுக்குள்ளிருந்தே அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும், அவை ரஷ்யா உக்ரைனைத் தாக்கப் பயன்படுத்தும் ட்ரோன்களைப் போலவே உள்ளதாகவும், அவை வேண்டுமென்றேதான் போலந்துக்குள் அனுப்பப்பட்டிருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஜேர்மன் சேன்சலரான மெர்ஸும், நேட்டோவின் ஐரோப்பிய பகுதியின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் பாதுகாப்பு திறன்களை கணிசமாக அதிகரிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், இன்னும் உறுதியாக இருப்போம் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |