ஆபத்தான சுனாமி அலைகள் தாக்கக்கூடும்: மெக்சிகோவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்: மக்களுக்கு எச்சரிக்கை
மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
மெக்சிகோ கடற்கரையை ஒட்டிய பகுதியில் 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தை ரிக்டர் 7.4 என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டு இருந்தாலும், பின்னர் அதன் அளவை ரிக்டர் 7.3 ஆக மாற்றி அறிவித்தது.

மேலும் இந்த நிலநடுக்கம் சுமார் 10 கி.மீ ஆழத்தில் Aquiles serdan-க்கு தென்மேற்கே 48 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமான நில அதிர்வாக விஞ்ஞானிகள் இதனை வகைப்படுத்தும் நிலையில் பல உயர்மட்ட கட்டிடங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் ஆகியவையுடன் வேகமாக வளர்ந்து வரும் புவேர்ட்டோ மடேரோ பகுதிக்கு அருகில் இது ஏற்பட்டு இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட கூடும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஏற்படும் சுனாமி அலைகள் நிலநடுக்க மையத்தில் இருந்து 186 மைல் சுற்றளவில் உள்ள பகுதிகளை தாக்கலாம் என்றும், அலைகள் கடல் மட்டத்தில் இருந்து 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் உயரம் வரை எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்வடார், எல் சால்வடார், நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் மற்றும் பெரு ஆகிய நாடுகளின் கடற்கரையில் 0.3 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை தொடர்ந்து பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கடற்கரை பகுதிகளை தவிர்க்குமாறு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |