புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கி விபத்து... 50 கடந்த இறப்பு எண்ணிக்கை: டசின் கணக்கானோர் மாயம்
சுமார் 150 புலம்பெயர்ந்தோருடன் பயணமான படகு ஒன்று மோசமான வானிலை காரணமாக ஏமன் கடற்பகுதியில் மூழ்கிய நிலையில் குறைந்தது 54 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டசின் கணக்கானோர்
டசின் கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். ஏமனின் தெற்கு அப்யான் மாகாணத்தில் உள்ள அஹ்வர் மாவட்டம் அருகே அரபிக் கடலில் படகு கவிழ்ந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஞாயிறன்று நடந்த இச்சம்பவத்தில் ஒன்பது எத்தியோப்பியர்கள் மற்றும் ஒரு யேமன் நாட்டவர் என 10 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், ஆனால் டசின் கணக்கானோர் இன்னும் மாயமாகியுள்ளதாகவும், தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆப்பிரிக்காவிலிருந்து வரும் சட்டவிரோத புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை ஏமனில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
வேலை தேடும் நம்பிக்கையில், ஜிபூட்டி மற்றும் எரித்திரியாவை ஏமனில் இருந்து பிரிக்கும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியைக் கடந்து, புலம்பெயர்ந்தோர் ஒவ்வொரு ஆண்டும் பலவீனமான படகுகளில் பயணித்து சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர்.
ஏமனில் சிக்கித் தவித்து
சோமாலி தீபகற்பத்தில் இருந்து ஏமன் வரையிலான பாதை உலகின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகவும் ஆபத்தான கலப்பு இடம்பெயர்வு பாதைகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டு மட்டும் ஏமனில் 60,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் வருகைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2014 முதல் போர் காரணமாக ஏமன் நாசமடைந்தபோதிலும், சட்டவிரோத புலம்பெயர் மக்களின் வருகைத் தொடர்கிறது, குறிப்பாக இன மோதலால் பாதிக்கப்பட்ட எத்தியோப்பியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் வளைகுடா நாடுகள் நோக்கி பயணிக்கின்றனர்.
பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஏமனில் சிக்கித் தவித்து, தங்கள் பயணங்களின் போது துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளதையும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அமைப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |